Unnai Pol Oruvan

தலைப்பு: உன்னைப் போல் ஒருவன்
எழுதியவர்: ஜெயகாந்தன்
பாதிப்பு: மீனாட்சி பதிப்பகம்
பக்கங்கள்: 232

uop

 

இந்தியா எங்கு வாழ்கிறது கோவிலிலா? சேரியிலா?

இரண்டிலும் என்பார் ஜே.கே.

தாஜ்மஹாலோ, தாராவியோ அதன் உள்ளிருக்கும் ஆன்மாவே இந்தியா.

கோவிலின் சாத்திரமானாலும் , வேசியின் கோரைப்பாயானாலும், புதிய அணைக்கட்டானாலும் வாழ்வதற்காக ஒரு ஆத்மா அங்கே துடிதுடித்துப் போரடிக்க கொண்டிருக்கிறது.

எல்லா மட்டத்திலும் உயர்ந்த தரம், தாழ்ந்த தரம், வளர்ச்சி, வீழ்ச்சி, ஆக்கம்,, அழிவு என இப்பகுதிகள் உண்டு. Every standard has its own levels. ஒரே மட்டத்தில் அனைத்து தராதரங்களையும் பார்ப்பது தவறு.

இவ்வளவு பீடிகை வரும்போதே இது ஒரு விவகாரமான கதை என்பது புரிந்திருக்கும்.

கதைக்களம் ஒரு சேரியில் நடந்தாலும், கதை எங்கும் நடக்கலாம். கதை இது தான்: பதின்மவயது சிறுவன் தன் விதவை தாயுடன் வாழ்கிறான்.  உயரிய லட்சியத்துடன் வாழ்கிறான். ஒரு நாள் தன் தாய் ஆறு மாத கர்ப்பிணி என்பது தெரியவருகிறது. அதன் பின் நடப்பதே கதை.

ஜே.கே.யின் கதைகளில் நல்லவன், கெட்டவன் என்று யாருமே இல்லை. ஒவ்வொருவரும், சூழ்நிலைகளுக்குகேற்ப நடப்பவர்களே. அந்த நடத்தை பார்ப்பவரின் சூழ்நிலையைப் பொறுத்து நல்லதாகவோ கெட்டதாகவோ தெரியும். இக்கதையிலும்  அவ்வாறே!

தங்கம், சிட்டி, ஆப்பக்கார ஆயா அன்னம்மாள், எதிர் வீட்டு அலமேலு, கிளி ஜோசியர் மாணிக்கம், ஐஸ்கிரீம் கம்பெனி உரிமையாளர் துரைக்கண்ணு, கன்னியப்பன் போன்றோரே கதையின் முக்கிய மாந்தர்கள்.

உன்னை போல் ஒருவன் எனக்கு அண்ணனாக இருந்திருந்தால் நான் இப்படி ஆகியிருக்க மாட்டேன் என்று தங்கம் கூறும் போது

– பெயர் தெரியாத உன்னைப் போல் ஒருவனால் தான் பல தங்கங்கள் சீரழிகிறார்கள்

– மாணிக்கம் போன்ற உன்னைப் போல் ஒருவனால் தான் பல தங்கங்களின் வாழ்வில் மறுமணம் நடக்கிறது

– மாணிக்கம் போன்ற உன்னைப் போல் ஒருவனால் தான் சிலர் நிர்கதிக்குள்ளாகிறார்கள்

– அன்னம்மாள் போன்ற உன்னைப் போல் ஒருவனால் தான் பல தங்கங்களுக்கு ஆதரவு, பாசம் கிடைக்கிறது

– அலமேலு போன்ற உன்னைப் போல் ஒருவனால் தான் சொர்ணம் போன்ற குழந்தைகள் வளர முடிகிறது

– துரைக்கண்ணு போன்ற உன்னைப் போல் ஒருவனால் தான் பல சிட்டிகள் நல்வாழ்வு பெறுகிறார்கள்

உன்னைப்போல் பலர் இந்த சமூகத்தில் இருக்கிறார்கள். நீ யாராக உன்னை அடையாள படுத்திக்கொள்கிறாய் என்ற கேள்விக்கணை முடிவில் உங்களை உறுத்தும்.

பிடித்த வரிகள்:

– காலத்திற்கேற்பவும் இடத்திற்கேற்பவும் ஒரு பொருளின் தன்மை மாறுபடும் என்பது விஞ்ஞானவிதி.

– அவரது தாய்ப் பாசமே அவரைச் சிறந்த தனி மனிதனாக்கியது.

– குளிப்பது போன்ற காரியங்கள் இன்னொருத்தர் பார்க்கக் கூடாதுன்னு செய்யறது. பண்பு. அதில் அழகிருக்கு; உண்மையுமிருக்கு. இன்னொருத்தருக்குத் தெரியக்கூடாதுன்னு செய்யறது களவு. இதிலே பொய்யும் கோழைத்தனமும் வஞ்சகமும் ஏமாத்தற குணமும்தான் இருக்கு.

– இந்த ஆசைதான், இந்த சுகம்தான் அநுபவித்தபின் எவ்வளவு அற்பமாய் எவ்வளவு இழிந்ததாய் இருக்கிறது

– பழகின தீய சூழ்நிலையெ திடீர்னு கண்டா மறுபடியும் அந்த மயக்கம் இருக்கும்

– தன்னைத் தானே வெறுக்க ஆரம்பிச்சுட்டா அந்த மனசு அப்பறம் யாரையுமே நேசிக்க முடியாமலே அழுகிப் போயிடும்.

– அவரவர் அனுபவம் அவரவருக்கு மட்டும்தானே பாடமாகிறது.

– எந்த உடல் சுகம் தவறு என்றும் இழிவு என்று எல்லோராலும் பழிக்கப் பட்டதோ அந்தக் காரியத்தின் விளைவான அந்தக் குழந்தையைப் பழிக்க அங்கே யாரும் துணியவில்லையென்றால் அதில் அதிசயம் ஒன்றுமில்லை! அதுதான் இங்கு மலிந்து கிடக்கும் மனிதத் தன்மை! இதுவே ‘இந்த உலக’த்தின் இயல்பான தன்மை!

– மனிதன் முன்னேற ஆசைப் படுவதற்கும் முயற்சி செய்வதற்கும் ஏதாவது ஒரு பிடிப்பு வேண்டும்.

Comments

Blog at WordPress.com.

Up ↑