Vathal

ஏம்மா பிச்சைக்காரி மாறியே இருக்கேனு சொல்லிட்டு போய்ட்டானே கடன்காரன். அப்படி என்ன பண்ணினேன்? விரும்பி சாப்பிடுறானேன்னு வத்தல் பொரிச்சு குடுத்தேன். வீட்ல சாப்பிடற வதல்ல ஆபீஸ்ல சாப்பிட கூடாதா? இதுக்கு கோவப்பட்டு திட்டிட்டு போறான்.

வீட்ல இருந்து சாதம், சாம்பார், பொரியல்லாம் கொண்டு போகலாம், வத்தல் கொண்டு போகக்கூடாதா? சாப்பாடு கொண்டுபோறதுக்கு பளபளன்னு பாக்ஸ் இருக்கு. வத்தல் கொண்டு போக ஒன்னும் இல்லையே. அதனால முந்தாநாள் வாங்கின ஸ்வீட் கவர்ல வெச்சு குடுத்தேன். அது குத்தமா?

அந்த கவர் கூட ஒன்னும் அழுக்காலாம் இல்ல. சுருக்கம் சுருக்கமா இருக்கு அவ்வளோ தான். அது பிடிக்கலேனா வத்தல் கொண்டு போக நல்ல பாக்ஸ் வாங்க வேண்டியது தான. அதென்ன பிச்சைக்காரி மாறினு.

பிச்சைக்காரி என்ன வத்தலா போடுறா? பிச்சைக்காரி அன்னிக்கி என்ன தேவையோ அது கிடைக்காதோன்னு வீடுவீடா போறா? நான் எந்த வீட்டுக்கு போறேன்?

நாலு நாளுக்கு முன்னாடி எதுத்தவீட்டு பொண்ணு ‘ஆண்டி கொஞ்சம் பச்சை மிளகாய் இருக்கா’னு கேட்டு வந்தா. நான் அப்படி கூட யார் வீட்டுக்கும் போனதில்லை இவங்களையும் போக விட்டதில்லை. காப்பிக்கு போடுற சக்கரைல இருந்து பொறைக்கு வெக்கிற தயிர் வர ஏதாச்சும் இல்லேனு அடுத்த வீட்ல போய் நின்னுருப்பேனா இல்ல நிக்கவிட்டிருப்பேனா.

வீட்ல தயிர் பொறைக்கு விடுறதுனா சும்மாவா? நாளைக்கு மத்தியானம் சாப்பிடணுமேன்னு இன்னிக்கி காலைல பால் வாங்கும் போது கொஞ்சம் கூட வாங்கி, பக்குவமா காச்சி எடுத்துவெச்சு, நேத்து மிச்சம் வெச்ச தயிர்ல இருந்து கொஞ்சம் எடுத்து பொறைவிட்டு பக்குவப்படுத்தி மறுநாள் பதமா வெக்கணும். மறுபடியும் மக்கா நாளைக்கு தேவைக்கு ஏத்து கொஞ்சம் பொறைக்கு எடுத்து வெக்கணும். இப்படி ஒவ்வொவுரு நாளும் செய்யணும்.

இப்படித்தான் வத்தல் ஊறுகாய் எல்லாம். நாளைக்கு தேவைப்படும்னு இன்னிககு இருப்பதில் கொஞ்சம் மிச்சப்படுத்தி, பத படுத்தி, தேவை படும்போது சரியான நேரத்தில் எடுத்து குடுக்கணும்.
இதென்ன நான் மட்டும் செய்ற வேலையா? தலைமுறை தலைமுறையா செய்துட்டுவரோம்.

இதெல்லாம் பசிக்கும் போது ஸ்விகி டொமட்டோல வாங்கி சாப்பிட்டா எப்படி புரியும்?

அன்னிக்கி ஒரு கடைல கூட்டி போய் பர்கர்னனு ஒண்ண வாங்கி குடுத்துட்டு சொல்றான் இதை ரெண்டு நிமிஷத்துல பண்றான்னு. அவன் ரெண்டு நிமிஷத்துல செஞ்சு குடுக்கிறானா இல்ல ஏற்கனவே செஞ்சதை எடுத்து குடுக்கிறானா? நானும் போன இடத்துல எதுக்கு வாதம்னு ஒன்னும் சொல்லல.

அன்னிக்கி டிவில ‘அமெரிக்கா கிட்ட 5வருஷத்துக்கு தேவையான பெட்ரோல் சேமிப்புல இருக்கு. உலகத்துல உள்ள எல்லா எண்ணெய் கிணறும் வத்திட்டா கூட அவனால 5வருஷம் வண்டி ஓட்ட முடியும்னு’ சொல்றான். இதை கேட்டுட்டு இவனும் இவன் அப்பாவும் ‘அதான் அமெரிக்கா ஈராக் மேல குண்டு போடுது, ஈரான் மேல தடை விதிக்குது’னு பேசிக்கிறாங்க.

நமக்கு அதுவா முக்கியம். அவன் தேவைக்கு அவன் சேத்து வெக்கிறான். நாம என்ன வெச்சுருக்கோம்னு யோசிக்கல.

வீடோ, கடையோ, நாடோ இப்போது என்ன தேவைன்னு யோசிச்சிட்டு, நாளைய தேவைக்கும் சேர்த்துவெக்கணும். அப்படிப்பட்ட வீடும் நாடும் தான் தலைமுறை கடந்து நிக்கும். இன்னிக்கி தேவைய மட்டும் யோசிக்கிறவன் தான் பிச்சைக்காரன்.

இதை அவன்கிட்ட சொல்லணும்னு நினைக்கும்போதே செல்போன் சிணுங்கியது.

“சொல்லுடா என்னவேணும்?”

“அம்மா, எல்லாத்துக்கும் நீ குடுத்த வத்தல் ரொம்ப பிடிச்சிருக்கு. இவங்க வீட்டுக்கு கொஞ்சம் குடுக்கணும்னா இருக்குமா?”

“ஏன் இருக்காது? கவர்ல எடுத்துவெக்கிறேன். நாளைக்கே போய் குடு.”

“ஓகே மா. நைட்டு வரேன். பாக்கலாம்.”

கால் கட் செய்யும்போது “ஐ வில் கெட் யு தி ரா ஒன்ஸ் டுமரோனு” சொல்வது கேட்டது.

நாளைக்கு வத்தல் ஊற்ற கூழ் காய்ச்சணும். போய் ஜவ்வரிசி வாங்கிட்டு வரணும்னு என்று எழுந்தாள்.

One thought on “Vathal

Add yours

Comments

Blog at WordPress.com.

Up ↑