Sila Nerangalil Sila Manidhargal

புதினம்

snsm

தலைப்பு: சில நேரங்களில் சில மனிதர்கள்

எழுதியவர்: ஜெயகாந்தன்

பதிப்பு: மீனாட்சி புத்தக நிலையம்

 விலை: 250/-

பக்கங்கள்: 447

பலமுறை இந்த புதினம் பற்றி கேட்டும் இப்போது தான் படிக்க முடிந்தது.

ஓர் பெண்ணின் ஏமாற்றம், எழுச்சி, காதல், சோகம், வலி, நம்பிக்கை, சுயமரியாதை போன்றவற்றை பளார் பளார் என்று உரைக்கும் புதினம்!

மனிதர்களின் வாழ்வு சில நேரங்களில் எடுக்கும் முடிவு அல்லது நடக்கும் நிகழ்வே என்பதை உணர்த்தும் புதினம். நல்லவன் கெட்டவன், நம்பிக்கைக்கு உரியவன்-இல்லாதவன், என்பதெல்லாம் சந்தர்ப்பங்கள் நிர்ணயிக்கின்றது என்பதை நிறுவும் புதினம்.

கங்காவின் வாழ்வை கசக்கிய பிரபுதான் கங்காவின் நல்ல தோழனாக மாறுகிறான்!

தன் மகளுக்காகவே வாழ்கிறேன் என்று நினைக்கும் கங்காவின் அம்மாவினால் அவளது வாழ்க்கையே அழிக்கப் படுகிறது!

.வீட்டிலிருந்து துரத்தப்பட்ட கங்காவிற்கு அடைக்கலம் தரும் மாமாதான் வக்கிரபுத்தியுடன் கங்காவிடம் வருகிறார்!

வீட்டிலிருந்து கங்காவை துரத்திய அண்ணன் தான் அவளுக்கு கல்யாணம் என்றவுடன் பிரபுவின் உதவியுடன் அவளை சமாதானம் செய்ய மாறுகிறான்!

மஞ்சுவும் பத்மாவும் மாறுகிறார்கள்!

இறுதியில் கங்காவும் மாறுகிறாள்!

பிடித்தவரிகள்:

  • நம்மலால ஒண்ணுமே செய்ய முடியாத சில விஷயங்களைப்  போட்டு உருட்டி கொண்டிருப்பது புத்திசாலிதனம் அல்ல.
  • மாசுபட்ட மனதின் அழுக்கு – கண்ணீர்
  • யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன். (341)
    விளக்கம்: ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.

புத்தகம் படித்து முடித்தும் இரண்டு மூன்று நாட்கள் அதிர்ச்சியில் இருக்க வேண்டுமெனில் இந்த புதினம் நல்ல சாய்ஸ்.

பி.கு: முடிவு பிடிக்காமல் மனம் அதிகமாக வலித்தால் முன்னுரையை மீண்டும் ஒருமுறை படிக்கவும்.

திரைப்படம்

snsm-muv

கதை, திரைக்கதை, பாடல்கள்: ஜெயகாந்தன்
இசை: எம். எஸ். விஸ்வநாதன்
தயாரிப்பு: ABS Productions
இயக்கம்: A. பீம் சிங்

சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தினை நேற்று பார்த்தேன். நடிகர்களின் தேர்வு கனகச்சிதம்.  கங்காவாக லட்சுமி, பிரபாகராக (பிரபு) ஸ்ரீகாந்த், ஆர்.கே.வி.யாக நாகேஷ், மாமாவாக ஒய்.ஜி, பார்த்தசாரதி,  அம்மாவாக சுந்தரிபாய் , அண்ணனாக நீலகண்டன் நடித்துள்ளார்கள். லட்சுமி, சுந்தரிபாய் , மற்றும் நீலகண்டன் சரியான தேர்வு. இவர்களை தவிர வேறொருவரை அந்த பாத்திரத்தில் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

கதை சொல்லப் பட்ட விதத்தில் புதினத்திற்கும் படத்திற்கும் வித்தியாசம் இல்லை. கதையின் முடிவை படத்திற்காக மாற்றியுள்ளார்கள்.  இக்காலத்தில் எடுத்திருந்தால் முடிவை மாற்றியிருக்க வேண்டியிராது, அக்காலத்திற்கு தேவைப்பட்டிருக்கும் போல.

புதினத்தில் ஏற்பட்ட பாதிப்பு படத்தில் இல்லை. அதற்கு காரணம், படத்திற்கும் புதினத்திற்கும் கதை சொல்லும் பாங்கு வெவேறானவை. அநேகமாக ஜே.கே.வின் பிடிவாதம் காரணமாக புதினத்தின் போக்கிலேயே படம் எடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன், அதனால் லையிக்க முடியவில்லை.

அவள் ஒரு தொடர்கதை கவிதா, அவர்கள் அணு, அவள் அப்படிதான்  மஞ்சு, அரங்கேற்றம் லலிதா போல், கங்காவும் திரையில் நீங்கா இடம் பெற்றிருக்கவேண்டிய பாத்திரம். ஆனால் திரைக்கேற்ற பாத்திர படைப்பு இல்லாததால் அது நடக்கவில்லை.

பி.கு: நான் மிகவும் ரசித்து பார்த்தது அம்மா சுந்தரிபாயை. பல படங்களில் காமெடியனாக பார்த்த நீலகண்டனை குணச்சித்திர வேடத்தில் பார்ப்பது வித்யாசமாக இருந்தது. இவரும் சிறப்பாக நடித்திருந்தார். இவர்களின்  திறமையை  தமிழ் சினிமா சரியாக உபயோகிக்கவில்லை   என்றே தோன்றியது.

Comments

Blog at WordPress.com.

Up ↑