பொறுப்பு

பட்டினமருதூர் என்னும் சிறு கிராமத்தில் வசிக்கும் ராஜேந்திரன், தினமும் தெற்கு நோக்கி 5 கி.மீ தொலைவில் உள்ள டவுன்பஜார்க்கு சென்று முறுக்கு, சிப்ஸ், வற்றல் போன்ற நொறுக்கு தீணிகளை வாங்கி மடத்தூர், மில்லேர்புறம் போன்ற இடங்களில் உள்ள சிறு கடைகளுக்கு விற்று வாழ்க்கையை ஓட்டி வந்தார்.

இந்த ஊர்ல ஒரு பெரிய வியாபாரியாக வலம் வர வேண்டும் என்ற கனவுடன் தினமும் சைக்கிளில் தன் பண்டங்களை விற்று கொண்டிருந்தார்.

சைக்கிளில் சென்றால் நேரம் ஆகிறதென்றும் பைக் அல்லது ஸ்கூட்டர் இருந்தால் நிறைய இடங்களுக்கு சென்று சரக்கு குடுக்க முடியும் என்பது ராஜேந்திரனுக்கு புரிந்தது.

போன மாதம், தான் சிறுக சிறுக சேர்த்ததில் இருந்து, 2007 மாடல் ஹீரோ ஹோண்டா ஸீடீ டீலக்ஸ் வண்டியை 10,000 ரூபாய் பேசி 5,000 ரூபாய் முன்பணம் கொடுத்து வாங்கி இருந்தார். மீதத் தொகையை மாதம் 1,000 ரூபாய் வீதம் தருவதாக சொல்லி இருக்கிறார். முதல் தவணைக்கு இன்னும் ஒரு வாரத்தில் 200ரூபாய் சேர்க்க வேண்டிய முனைப்பில் இருந்தனர் ராஜேந்திரன்-தேவி தம்பதியினர்.

இந்த வார வரவு செலவு கணக்கைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

“என்ன ராஜூ அண்ணே சீக்கிரம் வந்துட்டீங்களா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார் மோகன்.

தன் வீட்டில் இருந்து கிழக்கு நோக்கி சுமார் 5கி.மீ தூரத்தில் உள்ள திரு. வி.க நகரில் உள்ளார் மோகன். தன் நண்பனின் தம்பி. தன் நட்பு வட்டாரத்தில் முதுகலை வரை படிததுள்ளவர்களில், மோகனும் ஒருவர். 25 வயது முடிந்துள்ளது. சரியான வேலை கிடைக்காததால், ஒரு வீட்டு மனை விற்பனை செய்யும் ஓர் சிறு குழுவுடன் கமிஷன் அடிப்படையில் வேலை செய்து வருகிறார். சமீபத்தில் கொஞ்சம் அரசியல் ஆர்வமும் ஏறிட்டு பார்த்தால், ஓர் அரசியல் கட்சியில் சேர்ந்து அதன் நிகழ்ச்சிகளுக்கும் போய் வருகிறார்.

“உட்காருப்பா” என்று சேரை காட்டி, “நாம வழக்கம்மா சரக்கு எடுக்குற அண்ணாச்சி வீட்டு கிரகப்பிரவேசம் இன்னிக்கி…அதனால சரக்கு கொடுக்க வேண்டிய பார்ட்டிகளுக்கு நேற்றே கொடுத்தாச்சு..காலைல அவங்க வீட்டுக்கு போய்ட்டு மதிய சாப்பாட்டுக்கு அப்புறம் தான் வந்தோம்…கொஞ்ச அசதியா இருந்துது…சரினு இன்னிக்கி லீவ் எடுத்தாச்சு” என்றார் ராஜேந்திரன்.

“வாப்பா, எப்படி இருக்கே?” என்றே டீ-யை எடுத்துக் கொண்டு வந்தாள் தேவி.

“என்ன அண்ணி, சைக்கிளில் நாள் முழுக்க சுத்தினாலும் சுறுசுறுப்பா இருப்பவரு, இப்போ வண்டில போகும் போது அசதினு சொல்லி லீவெல்லாம் எடுக்கிறார்?” என்று டீ-யை வாங்கி கொண்டு சிரித்துக் கொண்டே கேட்டார் மோகன்.

இருவரும் சிரித்துக் கொண்டே ராஜேந்திரனை பார்த்தனர்.

“அது சரி” என்று கீழே பார்த்தாவாரே ராஜேந்திரன். ஒரு வேளை புது சுகம் நம்மை சோம்பேறி ஆக்குகிறதோ என்று ஒரு கணம் யோசிக்க தொடங்கினார்.

அந்த நினைப்பை தடை போட “அண்ணே சீக்கிரம் வெளிய போகனும். வந்த விஷயத்த உடனே சொல்லிட்டு கிளம்புறேன்” என்று மோகன் தொடர்ந்தார்.

தேவி உள்ள போக எத்தனித்தாள்.

“இருங்க அண்ணி. இந்த விஷயம் உங்களுக்கும் தான்” என்று தேவியையும் இருக்க சொன்னார். தேவி நின்று கொண்டே கேட்டாள்.

“அண்ணே! அந்த ஆஸ்பத்திரிய எதிர்த்து வர போராட்டம் நாளைக்கு 100வது நாள். ஒரு அமைதி ஊர்வலம் போறோம். அதுக்கு நீங்க வரணும்” என்றார்.

“அடபோப்பா! அன்னிக்கி 50வது நாள் போராட்டத்துக்கு கூட்டிட்டு போன. அன்னிக்கி ஒரு நாள் வருமானம் போச்சு. முந்தியாச்சு பரவ இல்ல, இப்போ வண்டிக்கு ட்யூ கட்டணும் மாதம் 1000 ரூபாய் தேத்தனும். ஒவ்வொரு நாளும் வேலை முக்கியம்” என்று கூறி அந்த அழைப்பை தட்டி கழிக்க முயன்றார் ராஜேந்திரன்.

“அன்னிக்கி வந்த போராட்டத்துக்கே காசு தரேன்னு சொன்னேன். நீங்க தான் வாங்கிக்கல. இன்னிக்கி வந்து வருமானம் போச்சுணு சொல்ல கூடாது” என்று அன்றைய போராட்ட தினத்தை ஒரு நொடியில் நியாபகப்படுத்தி தன் நிலையை நியாயப்படுத்தினார் மோகன்.

“இன்னிக்கும் நீ காசு தரலேனு வருத்தம் இல்ல. அப்படி ஒரு காசு வேணும்னு ஆசையும்படல. அந்த ஆஸ்பத்திரில வர கழிவை நம்ம ஊர் ஓடைகிட்ட கொட்டுவதால் கேடு வரும்னு சொல்றாங்க, ரெண்டு மூணு மாசம் முன்னாடி நம்மக்கு தெரிஞ்ச சில பெருக்கு ஒரு மர்ம காய்ச்சல் வந்துடுச்சு. அதுக்கும் அந்த ஆஸ்பத்திரிக்கு போய் தான் வைத்தியம் பாத்தோம். நிறைய செலவாச்சு. அதனால அந்த ஆஸ்பத்திரி வேண்டாம்னு சொல்ற போராட்டத்துக்கு வந்தேன். அதுக்காக எப்போ பாத்தாலும் வர முடியாதுப்பா. நமக்கெல்லாம் வேலைக்கு போன தான் அடுப்பு எரியும். இல்லைனா நம்ம வாழ்க்கையே ஒரு போராட்டமா போயிடும்” என்று தன் எதார்த்த நிலயை விளக்கினார் ராஜேந்திரன்.

“என்ன அண்ணே சொல்றீங்க? அங்க போற எல்லாரும் தின கூலிதான். அப்போ போராட்டத நிறுத்திருவோமா?” என்றார் மோகன்.

“எனக்கென்னப்பா தெரியும். ஆனா இந்த போராட்டதால நிறைய ஜன நடமாட்டம் இருக்கு, நம்ம சரக்கு சீக்கிரம் வித்துப்போகுது. அதனால எனக்கு இந்த போராட்டம் லாபம் தான்” என்று கண்ணை சிமிட்டிக் கொண்டே சொன்னார் ராஜேந்திரன்.

“அண்ணே! இதெல்லாம் வேண்டாம். நாளைக்கு நாம் அதகள படுத்தணும்ணே. நிறைய பேர் வேணும். நீங்க எல்லோரும் வரணும்” அழுத்தமாக சொன்னார் மோகன்.

“எல்லாரும்னா நானுமா? போராட்டத்துக்கு வந்து வாழ்கனு கத்தனுமா? என்று ஆச்சர்யத்துடன் கேட்டாள் தேவி.

“அய்யோ அண்ணி! போராட்டத்துல யாரும் வாழணும்னு கத்த கூடாது” என்று திருத்தினார் மோகன். “வேணும்னா நாம வாழ்க்கை போச்சுன்னு கத்தலாம். ஆனா நாளைக்கு நடக்க போறது ஒரு அமைதி போராட்டம். அப்படியே எல்லாரும் நடந்து போய் கலெக்டர் ஆபீஸ்ல மனு குடுத்துட்டு வீட்டுக்கு வந்திடுவோம்”.

“என்னப்பா ஏதோ கல்யாணத்துக்கு குடும்பத்தோட வாங்காணு சொல்ற மாதிரி கூப்பிடுற. ரெண்டு நாள் சேர்ந்தாப்ல வேலைக்கு போகலேன்னா பொழைப்பு கெடும்பா. நம்மள மாதிரி தினக்கூலிகாரனுக்கு வேலைய மொடக்கற எந்த ஒரு விஷயமும் நல்லது இல்லப்பா. திருவிழா, கொண்டாட்டங்கள், ஏதோ ஒரு கூட்டம்னு நடந்து கிட்டே இருக்கணும்ப்பா” என்று தனக்கு சாதகமான நிலையை விளக்கினார் ராஜேந்திரன்.

“எண்ணனே இப்படி சொல்றீங்க? சினிமாக்காரங்க கூட நமக்கு அதரவா பேசுறாங்க. இங்க இருக்கிற ஆஸ்பத்திரி பத்தி அவங்களுக்கு இருக்கிற அக்கறை நமக்கு இருக்க வேண்டாமாண்ணே. அன்னிக்கி கிரிக்கெட் வேண்டாம்னு அவங்க குடுத்த ஆதரவுல காவேரி பத்தி எல்லாரும் பேசுறாங்க. இப்போ நாமளும் போனாதான் இந்த ஆஸ்பத்திரி பத்தி பேசி இதை மூட வைப்பார்கள்” என்றார் மோகன்.

“பேசுறாங்க சரி. காவேரி வந்துச்சா? கிரிக்கெட் தானப்பா போச்சு. அந்த ஆட்டம் இன்னிக்கி வேற எங்கயோ நடக்குது எல்லாரும் டீவில பாக்குறாங்க, சினிமாகாரங்க படம் இன்னிக்கும் ஒடுது, அரசியல்வாதிங்க பொழப்பு ஒடுது. ஆனா உங்களால அந்த கிரௌண்ட் பக்கத்துல இருக்கிற கடைல முறுக்கு, சிப்ஸ், பழம் விக்கிறவங்க, ஆட்டோ ஓட்டுறவங்க பொழப்பு போச்சு” என்று தன் சம்பந்த பட்டவாங்கற்களின் நிலையை பேசினார் ராஜேந்திரன்.

“அட போங்கண்ணே. வியாபாரம், பொழப்பு, முறுக்கு, சிப்ஸ்னூ பேசுறீங்க! சரி!! அண்ணி பசங்களையாச்சு அனுப்புங்க. நானே கூட்டி போறேன். கூட்டி வந்து விடுரேன். சாப்பாடு செலவு நான் பாத்துக்கிறேன்” என்று இன்னொரு வழியை சொன்னார் மோகன்.

இதை எதிர் பார்க்காத தேவி, ராஜேந்திரனை பார்த்தாள். ராஜேந்திரனுக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

“நீங்க முழு நேரம் இருக்க வேண்டியதில்ல அண்ணி. நீங்க பசங்க எல்லாரும் பத்து மணிக்கு வந்துட்டு ஆஸ்பத்திரில இருந்து கலெக்டர் ஆபீஸ் நோக்கி நடந்துட்டு அங்கிருந்து வீட்டுக்கு வந்துட வேண்டியது தான். மதியானம் ரெண்டு மணிக்கு வீட்டுக்கு வந்துடலாம். சரியா?” என்று அவசர படுத்தினார் மோகன்.

இருவரும் யோசித்தனர். போராட்டம், அரசியல், வருவாய் என்று தங்களுக்கு தெரிந்த அளவிற்கு வாத பிரதிவாதங்கள் நடந்தது.

“எத்தனை ஆட்களை கூட்டி போறோமோ அதுக்கு ஏத்தமாதிரி எனக்கும் கொஞ்சம் கமிஷன் வரும். நம்ம பொழப்பும் ஓடனும்ல அண்ணே. நீங்க ஒண்ணுத்துக்கும் கவலைப்படாதீங்க, நானே காலைல ஒன்பது மணிக்கு வந்து நானே கூட்டி போறேன்” என்றார் மோகன்.

தேவியும் குழந்தைகளும் செல்ல சம்மதித்தார் ராஜேந்திரன்.

“உனக்காக தாம்ப்பா ஒத்துக்கிட்டேன். பசங்க வராங்க நீதான் பொறுப்பு. மூணு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வர மாதிரி பாத்துக்கோப்பா “என்றார் ராஜேந்திரன்.

“கண்டிப்பா அண்ணே . நீங்களும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க. நாம ஊர் நல்லதுக்கு பண்றோம். நீங்களும் வந்தா நல்லா இருக்கும்” என்று சொல்லி கொண்டே வாசல் நோக்கி நகர்ந்தார் மோகன்.

“இப்போதைக்கு உன் நல்லது மட்டும் போதும்பா” என்று சிரித்துக் கொண்டே மோகனை வழி அனுப்பினார் ராஜேந்திரன் .

அன்றைய இரவு பேச்சு போராட்டம் பற்றியே இருந்தது. ராஜேந்திரன் கூட்ட நெரிசல் பாதுகாப்பு பற்றி அடிக்கடி தேவியிடம் சொன்னார். ஒவ்வொருவராக தூங்கினர்.

ராஜேந்திரனுக்கு தூக்கம் வரவில்லை. தாட்சண்யத்திற்காக வாக்கு கொடுத்து விட்டோமோ என்று யோசித்தார். நாளை தானும் கலந்துக்க கொள்ள முடியுமா இல்லை இவர்களை தனியாக அனுப்பலாமா என்று குழம்பியவாறே தூங்கினார். காலையில் எழும் போதும் குழப்பம் தொடர்ந்தது.

காலையில் எட்டு மணிக்கு வண்டியை தொடைத்து விட்டு ராஜேந்திரன் உள்ளே வந்தார். சரி நான் கிளம்புறேன். சரக்க எல்லாம் சீக்கிரம் குடுத்துட்டு முடிஞ்சா நானும் கலந்துக்கிறேன். ஜாக்கிரதையா இருங்க. கூட்டத்துல பசங்க ஜாக்கிரதை என்று சொல்லி இரு மனசாக பஜார்க்கு சென்றார் ராஜேந்திரன்.

9மணிக்கு மோகன் வந்து தேவி மற்றும் குழந்தைகளை போராட்டத்துக்கு கூட்டி சென்றார்.

சுமார் 11 மணிக்கு, ராஜேந்திரன் கலெக்டர் ஆஃபீஸ் அருகில் உள்ள கடைகளுக்கு சரக்கு இறக்க வந்தார். போலீஸ் கூட்டம் அதிகமாக இருந்தது. அமைதி ஊர்வலம் கலெக்டர் அலுவலகத்துக்கு 1 மணிக்கே வரும் என்று கேள்வி பட்டதால், கலெக்டர் அலுவலகத்தில் வண்டியை நிறுத்தி விட்டு அங்கேயே சில நண்பர்களிடம் பேசி கொண்டு இருந்தார்.

காலையில் இருந்து சுறுசுறுப்பாக இருந்த கலெக்டர் அலுவலகம் திடீரென பரபரப்பாக ஆனது. பெரும் கூட்டம் ஓடி வந்தது. பல வண்டிகள் தீக்கு இறையாயானது. சில இடங்களில் மக்களால் போலீஸ் தாக்கப் பட்டனர். சில இடங்களில் போலீசால் மக்கள் தாக்கப் பட்டனர். பரபரப்பில் இருந்து பதற்றத்திற்கு மாறியது கலெக்டர் அலுவலகம்.

கண்ணீர் புகை, தடியடி என்று போலீஸ் ஒருபக்கம் இருக்க. பெட்ரோல் குண்டு வீச்சு, கடைகள் சூறையாடல், ஏ.டி.எம் மெஷின்கள் உடைப்பு என்ன பலவிதங்களில் சில விரோதிகள் இறங்க, அந்த இடமே கலவற பூமியாக மாறியது. ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு அடுத்தடுத்து தீ வைத்தனர். மேலும், போலீஸ் படை வந்து துப்பாக்கி சூடு நடத்தியது.

மோகன் உதவியுடன் தேவியும் குழந்தைகளும் வீட்டிற்கு தப்பித்தோம் பிழைத்தோம் என்று வந்தார்கள்.

“தம்பி! அவரு கலெக்டர் ஆபீஸ் தான் வரேன்னு சொன்னார். அவரு எங்களை தேடிகிட்டு அங்க தான் இருப்பர். எப்படியாச்சு நாங்க வந்துட்டோம்னு அவர் கிட்ட சொல்லிடுப்பா” என்று கிளம்ப இருந்த மோகனுக்கு சொன்னாள் தேவி.

“சரி, அண்ணி” என்று மோகன் கிளம்ப, மூவரும் வீட்டினில் அழுது கொண்டே ராஜேந்திரனை தொடர்பு கொள்ள முயற்சித்தனர். இணைப்பு கிடைக்கவே இல்லை.

குழந்தைகள் பித்துபிடித்தவர்கள் போல் இருந்தனர்.

டிவியில் கலவரம், துப்பாக்கி சூடு, சிலர் மரணம் என்ன செய்திகள் வரவே தேவியின் பதட்டம் கூடியது. எந்த எண்னிற்கும் தொடர்பு கிடைக்காததால் அழுது கொண்டே படப்படபுடன் வெளியே பார்த்து கொண்டிருந்தாள்.

“கோமதிபுரம் செல்வராஜ் போலீஸ் சுட்டு செத்துட்டாராம், தேவி” என்று பக்கத்து வீட்டு நர்மதா அக்கா அழுதுக் கொண்டே சொல்ல. தேவியும் அழ தொடங்கினாள்.

அழுதுக் கொண்டே, “அவரும் காணலக்கா. ஃபோனே போகமாட்டேன்னுது” என்று அழுதுக் கொண்டே சொன்னாள் தேவி.

“கவலைப்படாதே! ஒன்னும் ஆகாது. நான் இங்க தாண்டி இருக்கேன் எதுனாலும் என்னை கூப்பிடு” என்று சொல்லிவிட்டு தன் வீட்டிற்கு போனாள் நர்மதை.

2 மணி நேரம் கழித்து நர்மதையின் கணவருடன் வீட்டிற்கு வந்தார் ராஜேந்திரன். ஒரு வித படப்படபுடன் காணப் பட்ட ராஜேந்திரன், தன் குழந்தைகளை பார்த்தவுடன் கொஞ்சம் சமாதானம் அடைந்தார்.

“என்னங்க உங்க நம்பர் கிடைக்கவே இல்ல. நான் பயந்தே போய்ட்டேன்னு கலங்கியவாறு” சொன்னாள் தேவி.

“நானும் உனக்கு தான் போட்டுட்டே இருக்கேன். யார் நம்பரும் கிடைக்கல. கலெக்டர் ஆபீஸ்ல இருந்து தலை தப்பிச்சது தம்பூரான் புண்ணியம்னு ஓடி வந்தேன். இங்க தெரு முக்குல இருந்து அண்ணனுடன் வந்தேன்” என்று இன்னும் ஒரு வித படப்படப்பு அடங்காமல் சொன்னார் ராஜேந்திரன்.

“நல்லதா போச்சு. நீங்க வந்தீங்களே அது போதும்” என்றாள்.

தாங்கள் ஓடி வந்த கதையை பகிர்ந்து கொள்ள எது நினைவு வந்தவளாக “நம்ம வண்டி எங்கேங்க” என்றாள் தேவி.

“கலெக்டர் ஆஃபீஸ்ல நடந்த கலவரத்துல யாரோ சில பேரு கண்ணுல பட்ட வண்டியை ஒடச்சு தள்ளுனாங்க, அதுல நம்ம வண்டியும் ஒடஞ்சு நாசமா போச்சு” என்று அழுது கொண்டே சொன்னார் ராஜேந்திரன்.

“ஆ! என்ன சொல்றீங்க” என்று கேட்டு என்ன சொல்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தாள் தேவி. அழுது கொண்டிருந்தார் ராஜேந்திரன்.

இரண்டு நாட்கள் கழிந்தது.

குளித்து வேலைக்கு கிளம்ப தயார் ஆனார் ராஜேந்திரன்.

டிவியில் செய்திகளை பார்த்தார். தன் ஊரில் நிலமை சீராகியது என்று செய்தி வாசிக்கபட்டது.

“உண்மையாவே சரியாகிடுச்சா” என்றாள் தேவி.

“ஆமா. நமக்காக குரல் குடுத்த சினிமாகாரங்க படம் திரும்பவும் வந்துடுச்சு, நம்மை போராட்டத்துக்கு கூப்பிட்ட கட்சி அடுத்த போராட்டத்துக்கு கூப்பிடுறாங்க, எல்லாரும் அவங்க வேலைக்கு போறாங்க. அப்போ நிலைமை சரிஆகிடுச்சுனு தான அர்த்தம்” என்று நிறுத்தினார்.

“நானும் வேலைக்கு போறேன். வண்டி இல்லேனாலும் ட்யூ இருகுல. சைக்கிள்ல போய் தான் அதை அடைக்கணும்…இனி பழையபடி வர நேரமாகும்” என்று சொல்லிவிட்டு பஜார் நோக்கி சைக்கிளை ஓட்டினார் ராஜேந்திரன்.

Comments

Create a free website or blog at WordPress.com.

Up ↑